Sunday, January 21, 2018

குறள்

குறள்

திருமால் அருளால் திருநிறை வாசன்தாம் 
கூறு குறள்நா நூறும் -- பொருள்தேர்ந் 
தொருப்பட்டார் வாழ்வில் நெறிப்பட்டார் அன்றி 
மருள்விட்டு மாலடிக்காய் கிட்டு. 


கையாழி சங்கும்தண் டாமரையும் ஒண்கதைவாள்
மைமேனி மாதவனே காப்பு.

வனமாலி கதி சார்ங்கி சங்கீ சக்ரீ ச நந்தகீ
ஸ்ரீமாந் நாராயணோ விஷ்ணுர் வாஸுதேவோபி ரக்ஷது.

1. கொள்ளுவார் இஃதாள்  கருத்து ஓளடதமாய்
விள்ளலாம் ஞானத் திளிம்பு.


பிறர்க்கோவா யாக்கை பெறலால்என்? சன்மம்
சிறப்பதூம் தொண்டாள் கடை!

முயலாமை சோம்பலிவை கொண்ட பயனிலான்
தன்னோடு தாழும் குடி!

இமையோர் அமிர்தம் இறவாமை சேர்க்கும் !
நமைஉயிர்ப்ப தூம்வானின் மழை!!

ஆரணச்சொல் ஆளாது பொய்யுரை பேணுவார்
கூறுகற் பிலாரோடு உள்ளு.

ஈகை உடைத்தான் திருமுளை வித்தெனபல்
பாகை பகுத்தான் அறம்.


ஈகை இலார்மாட்டு செல்வம் காய்கலா 
சோகை மரம்போல் மலட்டு!

பொறிஐந்தும் பொன்றிநீர்  பொன்றாமுன் ஆற்றும்
அறம்முந்தும் நீத்தார் துணை.. 


நம்மை இகழ்ந்து தமின்பெருமை தேடுவார்
ஒம்மைநா ணப்பீடு செய்!

இருந்தும் ஈயார் வறிஞ்ஞர்; உலகியல்
சேரா அறிவோ அளறு.

11. ஈகை மறந்தாரோ காகைக்கும் சோறிடார்;
மாகவைகுந் தத்தேகல் எங்கு?

இடத்தால் குணம்திரியா கேண்மை குணத்தார்
அடுத்தாரும் நல்குணத்த ராம்.

மானம் பெரிது எனநினைவார் வானம்
பெரினும் வழுவார் அதன்

ஈயாமை அஞ்சுவ தஞ்சாமை விஞ்சநாணும்
ஈயாத செல்வர் பழி.

குணம்பணம் என்றறியாச் செல்வர் குணியை
வணக்கமில் கூற்று வறிது.

வாய்மை வழுவா வகைநின்ற பொய்மையும்
தூய்நெறிக்கண் தொக்கி வரும் .

மானம் பெரிதென் இருப்பார் புகழ்கெட
ஈனத் தொழுகல் இலார்.

பழிபாவம் உண்டியிவைக் கஞ்சும்
இழிகடைமேல் மட்டத் தவர்.

உண்டி இருந்தும் சுவைத்தலில் நோயாளன்
விண்டீயாச் செல்வத் தவன்.

நன்நெறி நல்வினைக்கண் இம்மை மருமைசேர்
நன்மை இருபா டியைந்து.

21. செல்வர் செருக்கு நடையில் வெளிப்பட
வெல்லா ரவர்ஏழையர் நெஞ்சு.

தகுதி யிலாதார் அவமதிப்ப சான்றோர்
வெகுளுமேல் தாங்கா உலகு.

வயிற்றிடும்பை கூர்நோயி னானுக்கீ யாதான்
பயிற்றுடம்பால் என்னோ பயன்?

ஈகை பெருஞ்செல்வத் தோடு அமையத்
தொகையிடுவார் துற்றார் அறம்.

மிகைபடு செல்வம் வறிஞ்ஞன்வாய்ச் செல்லா
புதைபட சேர்ப்பார் மரித்து.

நன்மையுடை நாற்றுக்காய் தூற்றாதா காற்றுமழை
புன்மையினார் செல்வம்போல் பொய்த்து.

ஆழ்கடல் அன்ன அறிவுடையார் அஃதிலார்
தாழ்குட நீரென் தளும்பு.

குன்றனைய குற்றம் செயினும் மறந்தவர்
நன்றதாய் ஒன்றதும் உள்ளு.

செல்வத்தால் ஆகா ததுயாது என்னின்,அச்
செல்வதாய் கூட்டும்மால் வீடு!

அல்லி குவளைபோல் நீர்குளத்த தேனும்தான்
நல்மணம் இல்லதாய்தாழ் நட்பு.

31. பொற்குவளைப் பெய்தநெய் போல்நற்றார்  நட்பதூம்;
அற்பரவர் கேண்மையோ கைப்பு.

இழையப் பழகியபின் தோழமை நோகா 
பிழையிடித் தாளால் கடன்.

உள்ளபோது ஈயென மொய்ப்பார் பொருள்விள்ள;
உள்ளார் உதவதற்றக் கால்.

தூறாக் குழிஆசை துற்றித் துயக்கறுத்தல்
சேராத ஊர்செல் வழி.

உபகாரத் தோடாம் அபகாரம் நோக்கார்
பெரியோர் மறவாரே கீழ்.

அயல்வரினும் ஈதல் மறவா மறையோர்
பயன்கயவர்க் என்னோ உரித்து?

சிரிதேவி தேடல் விடையா தமக்கை
வருமேல் இறையோ பிழைப்பு.

நாலுமுடை ஓர்மனைவி நன்கமையா இல்லம்தான்
கோலமுடைத் தாகிலும் பாழ்.

கற்றுக் களித்து இளைப்பின்றி ஏங்குவரே
ஏற்றத் திடைவாழ் கடை.

மனமாசு மாயக் கடமைசெய்; மாய்த்தபின்
ஞானச் சுடர்சேர் இறை!

41. அறியாவக் காலத்து ஆற்றவஞ்சி லாதயாவும்
தூறாவோ தூய்மையினார் கூட்டு?

குற்றம் களைந்து குணம்கூட்ட கூற்றும்நும்
ஆற்றா அறம்தான் அரண்.

இறப்பான் நலியா வகைநும் பிறப்பான்
சிறக்க குணமுடையார்க் கூடு.

விதைநெல் விருந்தாக்கி கேளீர் பசிதீர்க்கும்
கோதைஇல் கோயிலாம் காண்.

ஒழுகலோடு ஓட்டை சுவரதேனும் கற்பின்
வழுகலாள் வாழ்மனையே இல்.

ஊக்கமது ஆக்கம் தரலான் நோக்மது
மீக்கொடுமோக் கம்பெற லாம்.

நேசநன் நாயகன்தன் வேசியாய் தாசியாய்
கூசம் இசையாள் துணை.

கற்பெழில் மாதற்கு வீரன்கை வாளதாய்
கற்றகல்வி ஊருணிஊ ருக்கு.

குலவிச்சை கோடா தொழுகல் அறமாம்
பலவிச்சை நாடா திரு.

மணங்கொள் மல்லிகை மஞ்சள் வதன
அணங்கவள் கல்வி அழகு.

51. கடவுள் படைத்து விருந்து கொடுத்து
உடல்வாழ உண்ப துணவு.

உலக வழக்கில் தலைநிமிர்த்து; வீடு
இலக்கேல் அகமதை வீழ்த்து.
(த்ருஷ்ட்டத்தில் அஹங்கரிக்கை உத்க்ருஷ்ட்டம்.
அதிருஷ்ட்டத்தில் அஹங்கரிக்கை அபக்ருஷ்ட்டம்)

உறையில் இடாதவர் கூறு நெறியில்
திறம்பார் தலைதாழ்த்தல் இல்.

பூவில் மணம்வேறோ ? நம்இரா மாநுசனை
ஓவா வைட்டணவன் யாரு ?

கல்வி கடலதா கற்கையோ தீரத்து
ஒல்கு குளப்படிநீர் அற்று.

அறிவிலார் கேண்மை அடிக்கரும்பு நல்லறிஞ்ஞர்
தேறில் சுவைசேர் நுனி.

தருதலால் தான்பெருகி நஷ்டமில் வைப்பாம்
பெரும்கல்வி நும்தம் கிளைக்கு.

பேச்சும் நினைவும் பழுதில் ஒருமித்து
கூச்சம் தெளிய உரை.

கலங்காத நெஞ்சமும் காரியத்தில் கண்ணும்
உலப்பிலாத கீர்த்திப் படி.

யாங்குயாது எவ்விடத்து ஆற்ற அறிவார்க்கு
யாங்கோ தலும்ஏற்றம் மிக்கு.

61. பூவொடு நாறும் புனல்பன் நீரதால்
மேவுமணம் காற்றோர்பால் நட்பு.

பால்நிலா தன்மருவு ஏற்பினும் வாலறி
மேலோர் மெலியும் இழுக்கு.

கடலில் பிறந்து கடல்சேர்கார் அன்ன
உடல்பிறப்பு மண்ணாம் வினைத்து.

எய்துக எய்தற்க கூரம்பு நேர்நரியின்
வீய்குறி நீத்தஅரி மேல்.

வீய்பொருள் நீத்து உயிரின் உயர்இறைக்
குய்பொருள் நோற்ப தறிவு.

விலங்கின் உயர்மா நுடப்பிறவி தக்க
துலங்கி தனிப்பட ஓங்கு.

காலம் கடிதால் கடப்பாடு கோடல்
இலாது ஒழுக உணர்ந்து.

கூடி உலகில் பிறந்தவர் சேரவிழை
நாடுமேன் வீடுவீடா மே.

ஆன்மா அனைத்திலும் ஆமே சிரேட்டமதன்
உன்னதிக்கே ஓயா துழை..

பாலை குறைத்து உறைத்து உருக்கினாலும்
மேலை மணக்குநல்லோர் கூட்டு.

71. களவு,கள்,  கீழண்மை பேணா திரந்துய்
அளவும் வழுவார் பழகு!

கைமாறு ஒன்றும் கருதா உதவிக்குச் 
செய்மாறு பொன்றா நினைவு.


பொய்யுரை சூது  புறம்கூறு  வார்வெள்கக் 
காய்ந்தவரை வேரா விடு .


நல்லாரை நாடுவார் நன்நெறிக்காய்ப்  போந்தாராய் 
அல்லாரை என்பொருட்டாம் சார்வு?

பிறன்மனை பொய்புரட்டு தூற்றல் இவைபால் 
குருடுசெவி டூமையங் காற்று.


இடுக்கண் இருவினைப் வீய்பயனாய்  தெய்வத் 
தடுத்துண் பிறவி பிடித்து.

குற்றம் வெருவாமை துச்சம்; தமக்கிழைப்ப 
மற்றுபொறை காப்ப தறம் .

சாடல் பிறர்நலிய ஏசல் துணிவார்  
நுடிதவை அள்ளல் அரிது.

சினைத்தாய் நடைஎன் வினைகண் நிதானம் 
அனைத்துலகும் ஆளும் அளந்து.

புத்துள் படநாகம் வானிடிக்கு அஞ்சல்போல் 
மூத்தோர் சினத்தெஞ்சும் யார்? .

81. கருமவினை கால்விலங்கு தாளவிழ தெய்வத் 
திருமால்தாள் கட்டல் தலை.

தன்னைத்தான் மேலென் உயர்த்தல் அறிவின்மை 
சான்றோர்அங் குள்ளல் சிறப்பு.

ஐவரவர் கூடி நலிதல் அறிவார்
தவறிலர் ஒற்றுமை பாற்று.

தாயர்சொல் ஊண்விருந்து தந்தைசொல் நல்மருந்து 
நேய! அதன்வழிநீ நில்லு.

திரைப்பரவை நாளும் விரிந்து சுருங்கல்போல்
சேருவார் நட்பும்மேல் கீழ்.

இறையுணர் வின்றி பிறர்க்கீயா நாள்பாழ் 
நிறையுணர் ஞானதேடல் இல்.

பெரியாருக் காட்பட்டால் நாம்பெறாத பேறில்லை 
மூரிநீர் வையம் பிறந்து.

வானுழி நீரும்சேர் மண்நிறத்து மாறும்போல் 
தானிழி தன்மையோர் கூட்டு.

செய்வளப்பம் நெல்காட்ட, சான்றாண்மை நற்குலமால் 
ஐயமில் தாழ்வுதீயார் நட்பு.

ஆஸ்ரய ஆஸி :
தனக்கிட மானதும்தீ வேமதுபோல் தீய 
இனத்திட்ட நல்லவரஃ தாம்.

91. குலத்தொழில் ஏற்ப திகழ்வல; அற்றேல்
உலப்பில் உவந்தவை ஆற்று.

கரைந்துண்ணும் காக்கை இனத்தலா இப்பிறவி
நீரையும் ஊட்டாதார் ஊழ்.

வாய்ப்பூட்டு இல்லார் அடுசொல் திருகுபாண 
மாய்முடியும் இற்றறிவார் கூற்று. 

ஏழையர் குற்றம் கடியா திரங்கல்  
விழைவார் பெரியரல்லார் கீழ். 

உரைப்பார் துயர்தடியா வாளா இருப்பார் 
வரைமேலின் வீழ்தல் தகும் .

காசின்வாய் பண்டம் கரத்தளவே கிட்டினும்
பூசித்து நல்விருந்தாள் பெண்.

நூல்பால் உவகை இலார்;நுகர்சி ஓவார்;
நல்லவைபால் ஆர்வலராம் மூன்று.

செல்வம் தகவும் அமையினும் நல்மனைவி 
இல்லையோர் இல்புல்வேய் காடு


பொருள்சேர இன்றுநாளை என்றெதிர் நோக்கி 
இரகுவார் வாழ்க்கையாம் வீண்.


ஒழுக்க இயல்வோர் ; குடிவழுவா கோல்மன்
செழுந்தவசி வானோர் விருந்து.

101. பாலனைப்போல் செய்படிறும் கற்றறிந்தார் தூற்றலும் 
ஏலா வெகுளியிவை தாழ்வு.


நீர்க்கொடை நீடு புகழ்க்கொடை கற்புடைப்பெண்  
யார்க்குடை யாரவர்விண் வேட்டு.

செவ்வாயில் வெண்முத்தின் சிரிப்போ? இயற்கையை 
தவ்வை தழுவா வனப்பு!

வருவாய் பகிர்ந்து பலர்வாய் அறியும்  
திருவாய்ப்பச் தெய்வத் தெழல்.

மழைஎழு நீர்க்குமிழ்போல் வாழ்வு; இதில்தான் 
பிழையில் அறம்செய நாடு.

முன்கோபி மூர்க்கர் பொருள்பித்தர் சொல்பொருள் 
துன்னலார் நூக்குமிநெல் ஆய்ந்து.

அரசிகன் ஆள்அழகும்; மீட்டிசையும் கல்லாதார் 
கூறுவாதாம் புல்லுரையும் பாழ்த்து.

குடிஇடர்த்த கோன்;தெளிந்த சொல்திண் பொருள்கரப்பார்;
கூடாஇல் நாடிநீடா வான்.

பிறர்க்குதவும் உள்ளம்; நெறிநிற்றல்; நண்பர் 
திறத்து பெருகவாழ்தல் நோன்பு.

மனதாட்சி கொண்டபெண் போற்றிவாழ் மாட்சி 
மனசாட்சி மாயன்கை சாய்சு .

111. ஆராய்ந்து சொல்லல்; பயனில விலக்கிமெய் 
கூறலிவை கற்றோர் கடன்.

ஒலிகடல்போல் ஆழ்அறிவார் நுண்கலை யார்க்கு 
விலையோ மயல்வீய் தடை ?

சொல்செல்லா மக்கள் வருசெல்வம் நில்லாஇல்  
நல்மனைஎன் றல்லாதாள் எற்று?

பயன்பார்த்த நட்பு அயலுளார்மேல் காழ்ப்பு 
துயர்பயக்கும் பேச்சுமாம் ஏச்சு.

இளமையில் கற்றுபின் பெற்றவர் துற்றி 
வளமை நெறிநிற்றல் வாழ்வு.


நல்கலார் செல்வமும் காவலில் செய்விளையும் 
எல்லில்கள் ளர்வாய் கரும்பு.

பொய்சாட்சி போற்றா உதவிபிறர் தாயமா  
வைபொருள் வவ்வல் கடை.

பொய்த்துணிபு நேர்விருந்து ஆற்றார் முப்பொறி 
வாய்நேர்மை அற்றார் விலக்கு.

விருந்தோம்பல் நன்மக்கள் பேறு மனைமாட்சி 
சேர்கிழத்தி இல்லத் தணி .

121. அடங்கா மனையாள் உழையா பணியாள்
இடர்கூர் உறவாம்நும் ஊழ்.

கொன்றுவரும் ஆக்கம் சிறுஉதவிக் கைமாறு 
சென்றிரப்பார் எள்கலிவை நீக்கு.


கொடையான்கண் செல்வம் நடையான்கண் நல்லறிவு
தேடுவார்நண் காய்த்த மரம்.

மனனகத் தாம்மலம் பொய்மைசேர் தீமை 
தனதகத் தில்லார் தவம்.

முறைமைஇல் ஆளுமை சீலமில் செவ்வி 
நிறையழிந்தார் நோன்பாம் தரிசு.

கீழ்மை இலார்ஒழுகி நீதி வழுவார்
தோழமை நற்குடிசேர் ஞான்று.

கற்றாருள் கற்றனாய் செல்வமற்றார் பெற்றாரும் 
போற்றப் பொருள்தெரிவார் கூற்று.

அழையா வருவான் வரும்போர் உரைப்பான் 
கழுத்தோலை கண்ணன்செய் தூது.

உயிர்க்கன்பு நேரா தொழுகல் உயர்கல்வி
தேறா துரைநீதி தாழ்த்து.


உயிர்கொள் விசாதி மாய்ப்ப பொருள்கை 
முயங்கா பெருந்துயர்என் பெற்று?

131. உயிர்க்கொலை கற்றறியார் சுற்றம் செயல்விரய 
காலத்திவர் மூவர்மூர் கர் .

கற்புடை மாதர்மார் நற்றவப் பெற்றியோர்
கொற்றவர்வாய்ப் பெய்யும் மழை.

நட்புநாடார் நட்பு குணமிலார் மொய்பு 
மடதி மதியார் விதி.

ஆசாரம் நோக்கா பசிஅறமில் பேராசை
கூசம்செய் கோபம் விலக்கு.

மூத்தோர்சொல் கேளாமை, நட்பினார்  பொய்யாடல்,
யாத்த மனைநீத்தல்  கேடு .

கல்வி அறிவற்றார் கெட்டவழி உற்றார்வன்
சொல்துற்றத் தோலார் திறம்பு.

இல்லாள்கை துத்தன்னம் பெற்றார் இரந்துண்ணல்
போல்செல்வம் நில்லாக் கரந்து.

உருளு சகடம்போல் செல்வம் இராது
தருகை இலார்தளை பட்டு.


உலகாளும் ஓர்கோனாய் செல்வத் திருந்தார்
தலைகவிழத் தோற்றோடப் போம்.


ஆன்ற படையரண் செல்வம் இவையுடைகோன்
நின்றாளும் ஞலத்தூ டு.



141. பெற்றது தன்னதாய் பாழ்கொடாது மற்றது 
அற்றவர் கையுறல் மாண்.


மறுமைவீழ் வானின்கண் வித்திட்ட செல்வம் 
நெறிமையால் துற்றர்க் கிடம்.

பன்நாள்தான் பட்டினி நேர்ந்துசேர் செல்வத்தால் 
என்னோ இரப்பார் மறுத்து ?

பருவம் ஒருபா டகல வெறுவா
தறிவார் நசையற வாழ்ந்து.

நரைதிரை கண்பொறை வீழ்ந்தவப் போதும்
நிறைமதியாள் பித்தெவர்க் கற்று?

ஈன்றாளை ஈன்றாளும் என்ஈன்றாள் செல்வழி 
சென்றுழலும் சீர்மைத் துலகு.

உண்ணும் உணவும் உவந்துதின் னும்அன்னம்
கண்ணன்மால் வண்ணத்தே காண்.

கார்கால ஊண்வெயில் காலத்தே சேர்எறும்பு;
நீர்க்கோல வாழ்கை விலக்கு.

பருவம் விலக உருமாற்றம் தோற்றக்
கருதார் இளமை செலவு.

இற்றைக்கென் பிற்றைநாள் ஆற்றலம் என்றீகை
மாற்றுவார் பூவிடாத காவு.


151. உலகாண்ட மன்னரோடு தெய்வமேலும் மீள்தல்
நிலமிசை நீடுவாழ்தல் இல்.


காலம் குடைந்துண்ணும் நம்வாணாள் வீழாமுன் 
ஞாலம் தொழுஅறத்தால் வெல் .

பிறந்துண்டு வாழ்தென் பெறப்பெற்றீர்? மற்றை
அரவதண்டத் துய்யல் முயற்று.

அய்யன் விடைகொள மெய்யிது வாம்சடலம்
செய்வர்யார் அஃதன் சிறப்பு?

யாவித்யா ஸா விமுக்தயே : 
பிறப்பிடை தோறும் மறுபடி தோற்றல்
நிறுத்த முயற்றார்என் கற்று?


குடந்தைக் கிடந்த மணிவண்ணா! ஐம்படைபோல் 
அடியேனை யும்உனக் காக்கு.

பெய்து வெளுத்தவான் மேகம்போல் நும்யாக்கை
எய்த பயன்அற்றேல் பொய்த்து.


சுவையில் அழுந்தி நவையில் விழுந்தார்
அவிவின்றி வாழ்தல் அரிது.

மின்னின் நிலைஇல வாழ்கை கலையாமுன்
துன்னிய செய்துய்யக் காண்.

குஞ்சு பொரித்துதன் கூடகலும் புள்ளினம்போல்
எஞ்சல் படாதேறும் வீடு.

161. ஊழ்வந் துருத்த நினைந்து வெதும்பாதே
பாழ்வினை குதம்பாய் திருத்து.

ஆலைநீள் செங்கரும்பின் சக்கைபோல் கோதாம்முன்
மேலை அறம்செய் உடற்று.


கோடரி வீழ்மரத்து கூட்டுப் பறவைபோல்
தேடுமயல் நும்உடல் கொண்டு.


ஏழை எளியோர் முனிந்திகழ வேண்டாதார்
வாழ்கிலர் கீழோர்கை நேர்ந்து.


ஊன்உருக உள்ளுயிர் வாடமேன் தேடுவார்
தான்வருந்தார் தக்கது பெற்று.


நேற்றா கதநல் லறம்நாம்இன் றாவது
நோற்பநம னார்க்கென்செல் சார்வு?


வீழும் உடற்கே விருந்திடாதே நல்லறத்தான்
வாழுவராம் விண்ணோர் விருந்து.


வித்தினுள் ஆலேபோல் உத்தமர்கை பொன்பொருளாம்
எத்துணைத் தேனும் அறம்.


அடுத்தடுத்து யாக்கை மடுத்தல் முடித்து 
நடத்தும் விடுவான் விடுத்து.


வருமையில் நீடா உறவும் தரத்தில்
உருக்கியறி யாப்பொன்னும் பாழ்.


171. ஏழ்மை யிலும்இரவா நம்குசேலன் தோழமை
வாழ்வினில் கண்ணாநீ தா.


தோல்நீங்க ஈஓட்டப் போகாது காயமிது
வால்சேற்றுத் தாமரைபோல் மாற்று.


உயிர்க்கான ஊன உடல்இரண்டன் சேர்கை
உயரவன் செய்கை வினைத்து.

தேகம் சரீரமாம் போது உயிர்க்கது
மோகம் முடிக்கும் வழி .


ஆபத்தில் ஆடை சுரந்த இறைநாமம்
பாபத்தை மாய்க்கும் உயிர்க்கு.


முத்துப்பல் தோற்ற முகுளு நகைவனப்பு
பூத்துவாடும் நாள்மலரோ டொத்து.


நல்வினை தீவினை என்பதூம் நீதியின்கண்
ஒல்கும் அயற்பால தில்.
 


விளக்கொளி தாழவிருள் மூழ்கல்போல் நல்வினை
மாள புகுதரும் தீது.


பற்றுக பற்றற்றான் பாதங்கள் அப்பற்று
முற்றுவிக்கும் மற்றய பற்று.


வயலுக் கழகு கதிரும் கரும்பும்
உயிற்கழகு வீட்டின்ப மாட்டு.


181. கறுக்கொண்டு ஆக்கும் பிறர்கெடுக்கும் கோபம்
துறப்பவர் நன்நயம் தேடு.


பாயும் புலிகீழே பைநாகம் மேலேயாய்
வாயதுவீழ் தேன்சுவை வாழ்வு.
 


ஐந்தவியா வாழ்ந்தென் சிறந்தாய் மனமேசெய்
எந்தனோடு பொன்றா வறம்.

செந்தமிழும் சீர்த்த வடகலையும் எந்தமக்கு
அந்தனாகா பார்வைசேர் கண்.

தம்மின் தமர்பழிப்பார் தான்பொறான் என்றவர்க்காய்
அம்மால் அடிக்கே இரகு.

கருத்தொளி காரிமாறன் காண விழைவார்
திருப்புளி ஆழ்வார்சேர் சென்று.

ஐம்பொறி கண்டவின்பம் முற்றுமாய் வீட்டின்பம்
துய்நெறிக்கு அற்றார் திரிபு.

மழைவெயில் அன்னவின்ப துன்பம்பின் நாட்ட 
விழைகலார் வாழ்வே துறவு. 

தம்மக்கள் காலால் உதைப்பவாரா விம்மல்
பொருமல் பிறர்மேவல் எற்று?


அறுத்துச் சுடினும்உள் ஆறுமாறா தீச் சொல்
இறைப்ப இரைதேடும் நா.


191. நீதி அலாதும் நெறிஇலாதும் நேர்வதாகில்
சோதியாது உள்ளம் கனல்.


வலியான் பொறையும் பொருளிலான் ஈகை
புலன்கா வலிளமையில் கூட்டு.


பகைத்தவர் பக்கல் வெறுவல் துறந்து
மிகைத்தவர் நன்மை விரும்பு.


நீசர் வெகுளி கறுக்கொண்ட வேழங்கொல்?
ஆசான்போல் வார்கஃது இல்.


வான்கருமம் நோற்றிருப்பார் மற்றையோர்தம் தீக்கருமம்
மேன்பெறினும் தான்தருதல் இல்.


கீழ்மையோர் சாடவையும் மல்லாந் துமிழ்வார்மேல்
வீழ்தல்வாய் மேலோர்க்கென் தாழ்வு?


தீய விடுத்து திணைத்ததேனும் தூய
செயப்போம் அணைவார் திறத்து.


தூண்டுதல் இன்றிநாம் செய்வினைபோம், வேண்டுதல் 
வேண்டா இலானடிக்காய்ச் சேர்ந்து.


ஒழக்கம் கெடக்கெடும் நட்பு அதுவால்
பழிபாவம் அஞ்சி நட.


வயிறொட்டி வாய்வெளுத் தாலும் பயிற்றேல்மின் 
ஈயோட்ட கையாட்டான் மாட்டு.


201. தக்கார் கெடதக்க தல்ல சொலல்பகை
மிக்கவரூண் நாயின் கடை.


திருவுடையார் செல்வம் பெருகும் அதுபோறும் 
எனாது பல்கிப் பெருத்து.

உலைஎரி ஏறா வறியர்க்கு ஈயாது
நாலுபாட்டுண் பார்வயிறாம் சால்.


உண்ணக் கனிதரும் நீழல் மரம்போலும் 
வண்கையிலார் மொட்டை மரம்.
 

ஐயம் தவசிக்காய் பிச்சை பயில்வார்க்காய்
செய்யு முபாயம் அறம்.

ஈத்தார் இருநிலம் ஆள்வார் அவர்புகழ்
நாத்திசையும் ஏத்தப் படும்.


வளர்செல்வம் சென்றக்கால் முன்னம் கிளர்சுற்றம்
காற்றளைபூ ளைபோல் பறந்து.


இகழ்சிக் கிணங்கா ரவர்புறம் கூறேல்மின்! 
ஆகுமதா கும்விதி வாய்த்து.


ஆற்றல் உளவாக அதுதமக்கு நோற்றபல்
பேற்றையும் பெற்றுத் தரும்.


தத் கிரதுந் நியாயம் ::
செய்தவத் தற்றேயாம் துய்பலன் வீடடை
மெய்தவத் தாம்பயன் விட்டு.


211. உச்சநீச வாழ்வில் உயர்வொடு தாழ்வுமே
எச்சப் படாதுய்ப்பார் இல்.


கல்விக் கழகு கசடற கற்றதன்
நல்வழி மேவல் பழகு.


நடந்தநும் பாதை தவறதானால் பின்நடந்து
செல்பயணம் மாற்றல் முயற்று. 


வாழ்க்கை இதுபாட சாலை அறிவுஜீவி
பாழ்க்கும் நுனிப்புல் மேய்ந்து?


கொடிமலர் சம்பங்கி யேனும் படர்கொம்பு
ஊடாம்முள் போல்கூடா நட்பு.


புலால் மறுப்பு உயிர்க்கொலை யான்அன்று
மேலாம் அறமதால் பொன்று.


பொய்புரளி பொல்லாங்கு இல்லாது சொல்லல்தான்
உய்விடாது தூற்றக் கெடும்.


பசுவும் கிளியும் பழக்கல் அதுவால்
வசதி அவைக்காகில் நன்று.


சுற்றித் திரியும் விலங்கைப் பற்றி 
அடைப்பார் பிறவித் தளை.


நல்லவர் அல்லாதார் ஒல்குங்கால் பொல்லாங்கு 
வல்லவராய் மெல்லக் கெடும் .


221. நட்புக் கழகுநல்லா ரோடிணங்கல் தீயோரவர்
கூட்டு பிறைநிலவாய் தேய்ந்து.


நல்லெண்ணம் நற்செயல் நன்மதிப்பு நன்றாகும்
வல்லமை ஈந்தானாட் பட்டு. 


ஆழாந் தணையாதார் கேண்மைதான் தாழம்பூ 
தாழையுள் பூநாகம் கண்டு.


சுயோதனுக்காய் கன்னனவன் செய்த உதவி
பயனலதாய் தானும் முடிந்து.


மெய்அழகும் மேனி திருத்தியென்? உள்ளத்து
வாய்மை இலவாத லின்?


அறியாமை நோய்க்காம் மருந்து அறநூல்
துறையாடி ஆன்றோர்வாய் கேட்டு.

பிரிந்திருப்பார் ஆற்றாமை கட்டுவிச்சி கோலும்
உரியமால் சேர்உபாயம் நேர்ந்து.

செய்தவத்தான் சீராட்டி மாநுடங்காள் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்.

பிறப்பான் வருவதன்று மேன்மை; அறத்தின்
திறத்தார் கருதார் குலம்.

கற்றதுகை மண்அற்று; கல்லா ததுநிற்ற
குன்றதாய் ஆராயல் பட்டு.

231. கள்ளர் கொளலாகா கல்விதான் விள்கலா
செல்வம்போல் அல்லதொரு மாடு.

பழிபாவம் அன்னையப்பர் தாய்நாடு நோக்கார்
வழிவாயில் துத்துண்ணல் தாழ்வு.

கற்றாரைப் பற்றி ஒழுகுவார் பூவொடு
உற்றநார்போல் வாசம் பெறும்.

தீங்கருப்பஞ் சாறுபோல் கற்றறிந்தார் சேர்க்கை,நீர்
வாங்கிய சக்கை போல் மற்று.

இடும்பைகூர் யாக்கை இதுவென வாலும்
கடமைசோர் தல்இலாமே லோர்.

பாலைவாய் கானல்பின் சென்று விடாய்த்தார்க்கு
சோலைவாய்த் தன்னமேலோர் வீடு .

சிவிகை விசிரி விருந்தோடு உதகல்
உவகை பெருக்கி விடும்.

எய்துக எய்தற்க செய்வ துயர்வதாய்
பொய்யது போற்றல் விடுத்து.

உயர்வாம் இயற்றல்தாம் மேன்மையோர் நோன்பு
பெயர்புகழ் நோற்கிலார் அற்று.

புறத்தாரைக் காணில் அசலகத்தார் போலா
உறவுகொள்மே லோரவர் பேணு.

241. மூர்கர்சொல் யார்க்குமது ஏற்காது, தூர்தசெவி
சேர்த்தாலும் ஏலார் மனத்து.

ஆலைவாய் சாறுநீள் இன்கரும்பு அஃதேபோல்
மேலையார் தூறுவாய்நல் குற்று.

மதுமாது சூதுவாது தீதுபுகு தாமது
ஆன்றோர்க் குயிர்போன் றது .

புறங்கூறல்வாய் ஊமை பிறன்மனைபால் அந்தன்
குறைகேள் செவிடாய் இரு.

கீழோர் பழக்கம் இழிவாம் பழிப்பால்
விழுமியோர்க் கேண்மை விழைவு.

செல்வத் தளவையோ நற்குணம்? பின்னதுபால் 
செல்வார் இரண்டதால் மிக்கு.

தேவை அளவுபட துக்கம் பகுபடும்
மூவாத ஆசை முடித்து.

பொறையுடையார் சீற்றம் அதற்கு உறுவார்
இறைப்பொழுதும் ஆற்ற வரிது.

கடிதுகொண்டு ஆற்றக் கடிதாமால், ஆன்றோர்
முடிக்கு மரிதும் எளிது.

கியாதிலாப பூசைக் கிசையா பெரியோர்க்கு
தீயோர்ஏ தம்என் பொருட்டு?

251. இன்சொல் மிடியனாய் வன்சொல் வழங்குவார்
தன்கிளைக்குச் சூழ்ப்பதூம் ஊழ்.

கொடைகல்வி கேள்விஇம் மூன்றும் விழைவார்க்
கடைநின்றாள் பண்பின் நடை.

பிறர்கீயா செல்வம் விதைக்கலா வித்து;
அறம்செயவை குந்தம்நும் சொத்து.

கூடாஆ நட்பு கனிகலா நல்லொழுக்கம்; 
நீடும்நல் லோரவர் சார்பு.

சன்மம் உறலும் அறத்தான் விழுமிய 
இன்பம் பெறுவான் பொருட்டு.

தீநெறிக் கஞ்சி அறவழி ஆற்றுவார் 
வாழ்நெறி வைகுந்தத் தேற்று .

இரந்தார்க்கு இல்லை எனாதீதல் செய்யா
கரந்தார்க்கு என்குறுகா தூன்?


அரிமா பிடரிவாழ் உண்ணி அதுபோல்
பெரியார் பிடித்தார் உயர்வு.


வேடன்வால் மீகியானான் நாரதர் கொண்டதுவால்,
நாடும் பெரியவர் கூட்டு.


உழுபடைக்கு மேலெழா தாருசார் பூண்டதாய்
சூழல் பெரியோர்வாய் காப்பு.


261. போகி விடம்முறிக்கும் ஔடதம்போல் நம்முயிற்கு
ஆகுமுல காரியன்தாள் (என்) தேறு.


ஐங்கருவி யோடான ஆக்கையுள் தோய்உயிர்சேர்த்
திங்கேவும் தெய்வம்நம் தாய்.


துன்பம் பலமுகம் இன்பம் கனவுபோல்
மன்னுலகம் மாய மயக்கு.


எப்புகழ் யார்யார்வாய் கேட்கினும் அப்புகழ்
மால்புகழ் ஆமேல் மகிழ்ந்து.


கொல்லர் அளர்உப்பு உண்டிக் குரைப்பு
கல்விக் கல்ல பிறப்பு.


கருக்கொண்ட நாள்தொட்டு தான்பட்ட கஷ்டம்
மறக்கும் குழவி பிறந்து.

ஆக்கம் பகுத்துண்டு பல்லார் இணங்கவாழ்
நோக்கம் குணத்தாம் செறிவு.


நொடிந்தார் எழவவர் கைதூக்கித் தாங்கல் 
கொடிக்குகாய் பாரமாகா தற்று.


ஆற்றுக எச்செயலும் முற்றமுன் கற்றறிந்து
அற்றும் பயன்கருதா வற்று.


பகைஞர் திறத்தபால் சோற்றின் உகந்தார்
பகிர்கீரை சேர்கவளம் ஏற்பு.

271. அடுக்களை ஆன கொதிகலம் பற்ற 
இடுக்கிபோல் வாய்ப்ப உறவு.


நேசியார் வாசலில் கூசிநீர் உண்ணலின்
பாசத்தார் தங்கல் அமுது.


நாண்மலர் வண்ண நிலவின்பூ வெண்மைகொல்
காண்முகம் பூக்கச்செய் நட்பு.


கிட்ட விருந்தும் உளம்ஒட்டா நட்பினும்
எட்டவிருந் தும்நீங்கார் மேல்.


வேட்டுவார் ஈட்டாக்கை ஈதல்செய் வார்நீட்டிக்
காட்டாகை அத்தால்என் பெற்று?


அறனிலா அண்ணன்பால் சாரா இருவர்க்
குறவு இராமன்போல் யாறு?


பாம்போடு ஓர்கூரை யில்பயின்றாப் போல்ஆகா 
நோன்பொடு நல்லார் இணங்கு.


எற்றே முறைசெயினும் நேர்படா தம்மக்கள்
அற்றே பொறுப்பவாழ் நட்பு.


நட்புக் கிலக்கணம் நண்பர் அளிபொறையான் 
வெள்க நன்நலத் தாற்று.


காட்டுத்தீ வேட்டதேனும் வீட்டிலது பாகதீட்டும்
காட்டக் கனிவுசேர் நட்பு.


281. தாழ்குலமும் ஏழ்மையும் பக்தி உளதாமால்
வாழ்குலமாம் மால்புணரப் பெற்று.


பெறுவார் இலையாய் கொடையான் எவரோ ?
பெருமான்நீ யாவதூம் யான்.


ரசகுணிகை ஆசான் இசையபேறு நம்கை 
வசத்துளாம் நெல்லிக் கனி.


கேடில் பழிகாணார் கேண்மையோர் மாட்டவர்
கூடி கலந்தபின் ஆய்ந்து.


குற்றம் புறத்திருத்தி நற்றுணையா கல்நட்பின்
ஏற்றம் புரிவார் சிறப்பு.


கேளீர் ரவர்குறை ஏழ்பகைபோல் ஓவாதே 
ஆளீர்காள் காணாகண் இட்டு.


கேடில் குணமுடையார் தம்கேண்மை மாரிபோலும்
கூடா இணக்கம் வறட்டு.


நூல்வலைப் பட்டார் அவர்உறவு மோக்கமாம்;
மால்விளைக்கும் மற்றையார் நட்பு.


பந்தமிலார் நட்பதும் வைக்கோல்தீ போல்அவியும் 
நந்தா தீ பம்மேலோர் நட்பு.


வாழும் வயதுநூறு என்றோத நம்காலன்
தாழும்கா லம்யார் கணக்கு?


291. மண்டினார் விண்டிடக் கண்டுமே யாண்டும் 
உளர்போல் மறுகுவார்என்  கொண்டு?


மொழிந்த தொழிந்து ஒழிந்த திழிகுவார் 
தோழமை சூழல் இழுக்கு.


பெரியார்தம் நீர்மை மருதாணி வாசமும் 
சீரிய நற்சாந்தும் ஒத்து.


குணமுடையார் சேர்இனம் கண்டு நணுகேல் 
குயில்காகை குஞ்சுபொரித் தற்று.


பகைவர் மெலிவு கண்டு நலியாத்
தகைமை வலியுடையார் மாண்பு.


கைத்த கலப்பதேனும் தேனின் சுவைதிரியா
வாய்த்த இயல்புடையார் கூடு ..


மரணம் ஒருஇளைப் பாறல்; பிறவிகாம்  
காரணி,ஊழ் சேர்வினை மாட்டு.


உயிர்வதை கல்லாமை மூத்தோர்செய் வித்தம்
உயச்சுவையெல் லாரின் கடை.


நில்லா உலகிதில் செல்வம்செய் வானுலகம்
இல்லார்க் குதவிக்கை நேர்ந்து.


முகக்குறிப்பின் கூற்றறியா நட்பின்நம் நெஞ்சத்
தகக்குறிப் பாற்றுவார் ஏற்பு.


301. தன்னுயர்வு தன்னால் வருவதான் மற்றப்பேர் 
தன்னைப்பின் தாழ்தா துஞற்று.


ஊர்கூடி தேரிழுப்ப யார்பின்னும் சேர்தல்நேர் 
பார்மன்னர்க் கும்இழுக்க தன்று.


நூலாட்டி கோயில்கொள் பாவலர் வேட்டாத
மாலோன் பிராட்டிக்கென் நாட்டு?


இளமையில் கல்என்ற சொல்வழி நில்லாத 
ஆளர்பால் மோவாப் பதர்.


நாய்க்குட லுக்குநல்நெய் சேராதாப் போலேயாம் 
ஆய்ந்துரைத்த மூடர்க் கறம்.


கியாதியோடு லாபபூசை தேடுவார் கூடா 
பயத்தவர் நாடார் அவை.


மழைதும்பி நாடாத வாழைப்பூத் தேன்அற்றே
தாழ்நுகர்சிக் கோடும் மனம்.


செல்வம் கரந்திடாதார் இல்லம்தான் ஏழைக்கு
வௌவ்வால் நணுகா மரம்.


காகிதப்பூ நாடாத்தேன் ஈக்கள்போல் ஏகாரே
கற்றார் கடையர்வாய் கேட்டு.


நற்குணம் நல்லறிவு தாமரையாள் நோக்குற்றார் 
பெற்றி இறையருள்மேன் பாற்று.


311. ஊர்கொடு ஒவா திருப்பு அறிவின்மை 
ஏற்புடைத்தோ தாரார் திரு.


தனக்கியைந்த நல்லறம் சாற்றுவார் போற்றில் 
தனத்தினார் ஆற்றகில்லேல் தாழ்த்து.


தனக்கும் பிறர்க்கும் பயத்தலா செல்வம் 
சினத்தூடு சேர்த்தார் நகும்.


அகம்புறத் தூய்மையோடு வாய்மை செயல்சொல் 
தகவு இவைகாண் தவம்.

ஏரித் தலைமாட்டு செய்புலம்போல் நட்புடையார் 
கோரித் தனைத்தும் பெறும்.


காலத்தே செய்த உதவி சிறிதெனினும் 
சாலப் பலநாள்நீ கூவு.

காகிதப்பூ மொய்க்காத வண்டினம்போல் ஏழையர் 
ஆகில் நணுகா உறவு.

செல்வ முடையார் அடக்கமொடு அல்லாதார் 
நல்கலிவை  வீடணையும் வித்து.


படைநடுங்கும் பாம்பு இடிநடுங்கல் போல
தொடைநடுக்கம் மேலோர் சினம்.

உள்ளபோது கூடி பொருள்கை அலாதபோது
உள்ளா உலகிது என்?

321. நட்பும் உறவும் நலத்தான் கனிவார்க்கு
வட்கல் இரந்தார்க் கில.

ஏழை புறத்திட்டு பெண்டிர் முகம்காட்டா 
வாழிலை சோறும் விலக்கு .

பசிநோய் உசுப்பினும் துற்றல் இசையார் 
அசும்ப தறியார்க் கடை.

மானம் மதிப்பிவை தானும் உயிரினும் 
பேணுவார் வாழ்வார் நிலைத்து.

இறத்தல் ஒருநாளைத் துன்பம் கெடில்மானம் 
தூராப் பழியைத் தரும்.

ஈயாமை அல்ல இகழ்தன்னை எள்ளியார் 
மேவாமை அஃதாம் புகழ்.


புலிபசித் தாலும்புல் லைத்தின்னா; மானம் 
விலைத்தாய்வா னும்ஏலார் மேல்.


அலங்காரப் பேச்சு கருத்தாழ மில்பேச்சு 
தோலும் மிகவறிந்தார் முன்.


காக்கை கரைந்துண்ணும் சோற்றை பகிர்ந்துண்பார் 
யாக்கை விகிருதன்வாழ் வீடு.


விதியென்றும் ஊழ்என்றும் நம்தலையின் மேல்பொறிநன்
கோதிவெல்லற் பாற்றோ மதி?


331. பால்பானை கள்ளிடுவார் உண்டோ?நல் கூர்ந்தார்பால்
செல்நட்பு வீடதே நாடு.


இடித்துரைப்பான் நண்பன் அங்கனல்லார் தீமை 
முடிப்பா ரினுமாவர் தீது.



தற்புகழ்ச்சி முற்கோபம் கண்டவைமேல் அற்பாசை 
பெற்றார் பிறப்பில் கடை.

பொருளுண்டேல் அட்டைபோல் கூடிச் சுவைப்பர்; 
குறுக்குவார் இல்லதற்றக்  கால். 

ஓர்குளத்த தேலும்நீர் ஆம்பல் குவளையாமோ?
நீர்மை யினார்க்கேலார் கீழ்.

பிறன்மனை நோக்கார் புறம்கூறார் மாற்றான் 
மறைவுகேட்க் காமை அறம்.

வேண்டுதல் வேண்டாமை கொண்டாடா தேழையர் 
தொண்டுபூண்டார் ஆளப் பிறந்து.

தெப்பத் துணையின்றி உப்புக் கடல்மடுத்தான் 
ஒப்பு சலித்தமனத் தீர்வு.

கொடிவிளை பூசணி வீயாப்போல் மேலோர் 
விடுகிலார் சுற்றம் துறந்து.

கயவர் பெரிய பணம்வரினும் நேரார்
உயர்ந்தோர்க் குரிய செயல்.


341. குற்றம் கணிசியார் முன் செய்த நற்றம்
எணுசுவார்; அற்றிலார் மற்று.


கூடாப் பெருஞ்செல்வம் தேடித்தன் வாழ்வு 
மடுப்பார் நீர்க்குமிழ்போல் மாய்ந்து .


புலன்வெல்லல் மீதுறார் மேலோர் அலவை
உலப்ப அஃதிலார் கீழ்.


மழைதவழ் வான்குடுமி மாடுடமை யின்மாழை 
நோக்கு மனையாளே மிக்கு.


சொல்கேளாள் சோறட்டு சுற்றத் தவர்பேணா 
இல்லாட் கிறையோ பிழைப்பு.


ஓதி உயர்வோர் உண்டிருப்போர் போதமீதி
ஏதில் உழற்றும் அயர்த்து .


கேளீர் குறைகேட்டு மேல்விழ தான்நீடார் 
ஆளும் பொருளால்என் பெற்று?


வஞ்சம் வளர்வன்மம் துஞ்சக் கொடாநெஞ்சம் 
விஞ்சினார்க்கு தாமேதம் கூற்று.


கடிவர் அலர்என கூடா முடைவார் 
படிறது காத்தல் கடன்.


ஆக்கை இதுவால் அயற்புணினும் மோக்கம் 
உதகல் இதுபோல் எது?


351. நல்குறா நட்பு நெறியலாத ஈட்டுமேல் 
நல்குற்றார் கூட்டது மீட்டு.


கதிரறுத்த காணி உதிர்நெல் உணவட்ட
போதும் திறம்பாள் விருந்து.


மேன்கூறை சோரினும் மாடுடை வீடது
வான்கற்பில் வாட்டமிலாள் இல்.


வனப்பும் வனிதைக் குணம்நாலும் கொண்ட 
கணவற் கினியள்தான் பெண்டு.


பெண்திறத்த கைவளைபோல் பேதையர் பெற்றநலம்
திண்திறலார் கைவாள்போல் கூர்த்து.


துப்பாய கல்வியழ கொப்பதோ ஓதிலார் 
ஒப்பனை ஒவ்வா அழகு?


குலவிச்சை கோடா தொழுகல் அறமாம்
பலவிச்சை நாடார் எனில்.


தான்கொடுக்க தற்குறையா கல்வி யறிவதை 
மேன்கொடுப்பார் தூராக் கிணறு .


கற்றறிந்தார் மேன்மையும் சோற்றுக்கு உப்பதா 
ஏற்றம்; பிறப்பதால் அற்று.


வெட்டிவேர் வாசம் அதுடைய வாரிநீர் 
கூட்டும்போல் கற்றறிந்தார் நட்பு.


361. மருவுடை மாலோன் பெருமையது நேரார்
திருவுடையார் தாம்தீங் குரின்.


உடனிருந்து உள்ளத்து ஒட்டார் பிறிததாய் 
நீடணுக்கம் நெஞ்சத் துறவு.


நடப்பது நாரணன் தன்செயல் அல்லா 
தடுப்பதோ தன்செயல்என் சொல்லு?


ஒருநாள் பழகினும் நீடு நினைந்தொழுக 
நேரும் மேலோரே மிக்கு.



பொய்யுரை போக்கி பொழுதும் பழுதிலா 
வாய்மை ஒழுகுவாரோ டொட்டு .

விரிகடல் சேர்க்கழிவு நீருமாம் மூரிநீர்
சீரியார் சேரசோரும் தாழ்வு.

அல்லா ரவர்கூட் டவவம்ஓய் நல்லோர்தாம்
புல்வாய்பெய் பாட்டம் மழை.

வியன்பிறவி இங்கு விதிர்விதிர்ப்ப நிற்றார்
துயக்கறுக்கும் மூவா ஒழுக்கு.

சொல்சோர்வு சூழ்வினை நீதியிலா 
எல்லீரும் வீழ்வர் பழிக்கு.

பாலோடு நீர்சேரின் தான்பிறிதாய் தோற்றாதால் 
மேலோர் மதித்து இணங்கு.

371. பாலொடு கள்சேர பாலாம் பழுதுதீயோர்
பால்கூடல் கூடாப் பழி.


தொப்பைக் குழிதம்மின் துத்தாமுன் ஈதல்செய்  
தப்பார் இராவார் பிறந்து.

களவும் சிறியோர் உறவும் விலக்காய் 
கொளலில் அறவோர் பகை.

அழகன் குழகன் உழைக்கோல்வெல் பார்த்தன்
எழிலுக் இளகார்என் போந்து?

நீரந்திரேண ஸம்ச்லேஷ : சீலவது .
தன்பெருமை பேணாது கீழோர் கலப்பதோர் 
செந்தண்மை நீரின் திறத்து.


இடாதார் தனமேலோர் தாழ்தர நட்கக் 
கொடாதார் அணுக்கம் விலக்கு.



பிறப்புயிர் யாவும் உறப்புகல் சேர்வ 
தறியில் எதிராசர் காப்பு.

கற்புடையாள் ஊருணி பூண்புகழ் பாற்றினார்  
நிற்பப் புகழுடம் பாற்று .

மூப்பும் பிணியும் பிரிவும் ஒருவர்க்கு
காப்பும் கட்டும் இல.

ஐம்புலன் கண்ட அறிவு புலவீர்கள் 
தம்பால்சேர்ந் தாராய்ந் துணர்ந்து.

381. வண்டமர் சோலை அரங்கனார் தொண்டர்தம் 
தொண்டாள் வதேவுயிரின் மாண்பு.

குளித்தரையின் தூய்மை வளைகொடா வாய்மை 
சுளிதிரைத்தான் நேர்மைபோல் யாது?.

இல்லாள் இகழ்வாரும் மூத்தோர்சொல் நில்லாரும்
வல்விரயச் செல்வரும் பாழ்.

இலாமை யிலும்நில்லும் நேர்மைபிறன் நீடல்
குலாவும் கடப்பாடு நட்பு.

மனமாசு வாசனா மோகத்தாழ் பற்று
அனைத்தினீசன் மால்தாளே மாற்று.

தீக்குறள் செப்பி பிறன்முனிய செய்நன்றி
மீக்கூறார் நட்புடைமை தெற்று.

கிளைக்குதவா செல்வம் விளைபழகா ஏர்,நாளும்
தளரா குடிஉளதா மாய்.

வருவிருந்து நோக்கி குலமதலை ஆக்கித்
தரும்மனை பாக்கியளே தாய்.

அடங்கா மனையாள் அடிமையில் தொண்டர் 
படியா உறவவர் ஊழ்.

பாபம்வீய் புண்ணியம் ஆற்ற இறையனார் 
கோபம்போய் தண்ணளி கூட்டு.

390.அறம்என்ப தாதெனின் கொல்லாமை  நீடல்  
மறவாமை நில்லாமை நேர்ந்து.

புலன்கடிந்து வாய்மையுள் நிற்பார் திறம்போல் 
உலகத்து உண்டோ அறம்?



கொலையான்  பொருளும் உதவிக்கை மாறு 
விலையான் விழைவும் இகழ்வு.

ஊருணியார் செல்வமும் கற்றறிந்தார் பெற்றியும்
கோருவார் நல்கப் பெறும்.
நல்வழி நிற்றுயர் வுற்றார் மருமையில் 
அல்வழிக் கல்லராய்மீ தூர்ந்து.

கீழ்மைப் படார்உயர் நீதி விடார்பழி
வாழ்வைத் தொடாதார்சூழ் சால்பு.

மெய்வாய்தம் தூய்மை யினோடு மனமதும்
வாய்மையோ டாதல் தவம்.

சுகதுக்கம் நம்மனம் சார்உணர்வாய் மேன்சுவைத்
தேகுமுயிர்த் தெள்ளமால் உள்ளு.

முறையில் தலைமை நெறியில் தவம்பொறையில் 
வாழ்வும் முட்புதர்(வீய்)க்கொய் வித்து.



400. நல்லோர் உரையும் பொருள்வல்லோர் செய்நட்பும்
அல்லவை வல்லார்க்கண் நீக்கு.


Cont....d/ Blog-25B 

 துன்பம்பின் நா
--தாசாரதி தாஸன் 
(அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன் .